Saturday, 26 January 2013

"Chitti - the Robot" at Chennai Hospital






மருத்துவத்துறையில் எந்திரன்:
நாட்டிலேயே முதன் முறையாக சென்னையில் அறிமுகம்

இயந்திர மனிதனை மருத்துவத்துறையில் பயன்படுத்தும் தொழில்நுட்பம், கிராமப்புற மக்களையும் சென்றடைய வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் தெரிவித்துள்ளார். சென்னை இராமச்சந்திரா மருத்துவ பல்கலைக் கழகத்தின் தொலைதூர மருத்துவப் பிரிவில் "சிட்டி" என்ற ரோபோ சேர்க்கப்பட்டுள்ளது. இந்த இயந்திர மனிதன், 24 மணி நேரமும் நோயாளியின் நிலையைக் கண்காணித்து அது தொடர்பான தகவல்களை சம்பந்தப்பட்ட மருத்துவர்களுக்கு மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியாக அனுப்பும் திறன் கொண்டதாகும். மேலும், நோயாளிகளிடம் 24 மொழிகளில் நேரடியாக பேசும் திறனும் இதற்கு உள்ளது. ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன், ஐபேட் ஆகியவை மூலம், உலகின் எந்த மூலையில் இருந்தும் இதனை இயக்க முடியும். நாட்டிலேயே முதன் முறையாக அறிமுகமாகும் இந்த சேவையை தொடங்கி வைத்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம், மருத்துவர்கள் இல்லாத காலத்தில் நோயாளியின் உடல் நிலைக்கு ஏற்றவாறு ரோபோக்கள் சிகிச்சை அளிக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், நானோ தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்து வருவதாகவும், இனி நுண் மின்னணுவியலுக்கு மாற்றாக அனைத்து துறைகளிலும் நானோ தொழில்நுட்பம் இடம் பெறவுள்ளதாக தெரிவித்தார். மருத்துவம், மின்னணுவியல், பருப்பொருள் அறிவியல் ஆகியவற்றிலும் கூட இது சாத்தியமாகும் என்ற அவர், நானோ ரோபோக்கள் மருந்துகளை விநியோகிக்கும் பணியை ஒழுங்கு படுத்தவும் உதவும் என்று நம்புவதாக தெரிவித்தார்.

No comments:

Post a Comment